New year offer 2017

கனடா செய்திகள்

ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம் கனடா நாட்டில் அரங்கேற்றம்

12/05/2017

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமையவிருக்கிறது. இந்தச் செய்தியை தமிழர்கள் மத்தியில் பிரபலப்படுத்த, ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ அமைப்பு பல்வேறு வழிகளில் முயன்றுவருகிறது. இந்த வரிசையில் உருவான ‘ஹார்வார்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதம் கனடாவின் தலைநகரான டொரண்டோவில் நடத்தப்பட்ட சமீபத்திய நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதியுள்ள ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதத்துக்கு, இசையமைத்தவர் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ’ஒருநாள் கூத்து’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன். பாடலைப் பாடியவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்த ஜெஸிக்கா ஜூட். ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான அ.முத்துலிங்கம் பாடலைத் தயாரித்துள்ளார். ‘உலகத் தமிழர்க்கோர் தமிழ் இருக்கை’ என்று தொடங்கும் ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதம் பாடலை யூ-டியூப் வலைதளத்தில் காணலாம்.

கனடா நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ வழங்கிய சிறப்பு இலக்கியப் பரிசை பெறுவதற்காகப் பேராசிரியர் டேவிட் ஷுல்மன் டொரண்டோ வந்திருந்தார். விருதை வழங்கிய பின்னர், அவர் முன்னிலையில் ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதம் அதே மேடையில் வெளியிடப்பட்டது. ஹார்வர்டில் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர் டேவிட் ஷுல்மன் பேசியபோது, “ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நான், தமிழின் தொன்மையையும் பெருமையையும் உணர்ந்து தமிழை கற்று, அதன் இலக்கியங்களில் தோய்ந்து இன்புறமுடியுமானால் தமிழை தாய்மொழியாகக் கொண்ட உங்களுக்குத் தமிழ் பேசவும் கற்கவும் தயக்கம் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது” என்றார்.

‘பாடலை வெளியிட்ட பின்னர், பாடகி ஜெஸிக்கா ஜூட், அரவிந்தன் இசைக் குழுவுடன் பல பாடல்களைப் பாடினார். அந்த இசை நிகழ்ச்சி மூலம் சில மணி நேரங்களில் திரட்டப்பட்ட 10 ஆயிரம் டாலர்கள் நிதி நன்கொடையாக அளிக்கப்பட்டது. மேலும் ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ நன்கொடை வழங்க விரும்புபவர்கள் harvardtamilchair.org இணையதளத்துக்குச் சென்று donate என்ற பட்டனை அழுத்தி நன்கொடை அளிக்கலாம் என ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை’ அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.