கனடா செய்திகள்
ரஷ்யாவுடன் நீடித்த போரில் ஃபேஸ்புக்
04/11/2018சமூக வலைத்தளங்களை சுரண்டுவதற்கு முயற்சித்துவரும் ரஷ்ய செயற்பாட்டாளர்களும் தமது நிறுவனத்திற்கும் இடையே நீடித்த போர் நிலவி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல் திரட்டு முறைகேடு விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்களால், மார்க் சுக்கர்பேர்க்கிடம் நடத்தப்பட்ட பகிரங்க விசாரணையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து செனட்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ”நாம் யாருடைய தகவல்களையும் விற்க மாட்டோம். கல்லூரி பருவத்தில் நான்தான் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தொடங்கினேன். அதை நானே நடத்தி வருகிறேன். எனவே இதில் என்ன நடந்தாலும் பொறுப்பு கூற வேண்டியது தன்னுடைய கடப்பாடு.
சுமார் 200 கோடி மக்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடன் தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். எங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக தொலைநோக்குப் பார்வையை செலுத்தாமல் போனது பெரிய தவறு.
பேஸ்புக் நிறுவனத்தை நடத்தி வருவதால் அதில் நடக்கும் தவறுகளுக்கு நானே முழு பொறுப்பாளி என்பதால் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் ஐந்து கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, தற்போது முதல் சுற்று விசாரணைகள் நேற்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.