New year offer 2017

கனடா செய்திகள்

உலகம் சுற்றும் போட்டியில் காயமடைந்த இந்திய மாலுமியை மீட்கும் முயற்சி தொடர்கிறது

09/24/2018

உலகை சுற்றிவரும் கோல்டன் க்ளோப் படகுப்போட்டியில் கலந்து கொண்ட போது கடுமையாக காயமடைந்துள்ள இந்திய மாலுமியை மீட்பதற்காக சர்வதேச மீட்புக் குழுவினர் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னந்த தனியாக சென்ற மாலுமி அபிலாஷ் டொமி, மேற்கு அவுஸ்ரேலிய கடற்கரையில் இருந்து 3,200 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சிக்கியுள்ளார். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட கடும் புயலால் அவரது காற்று விசைப் படகான, ’துரியா’ உடைந்து சேதமாகியது.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில் தாம் படுகாயம் அடைந்துள்ளதாகவும், குறிப்பிட்ட இடத்தை விட்டு நகர முடியாமல் இருப்பதோடு, உணவருந்த மற்றும் நீர் அருந்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

டொமியின் நிலைமை குறித்து தகவல் வௌியிட்டுள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள் “அவர் படகின் உட்பகுதியில் தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும், துரிதகதியில் அவருக்கான உதவிகளை வழங்க முயற்சித்து வருகிறோம்” என்று அறிவித்துள்ளனர்.

பிரான்சின் மீன்பிடி கண்காணிப்பு கப்பல் ஒன்று அவர் இருக்கும் இடத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், நாளை (திங்கட்கிழமை) குறித்த இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்ரேலியா மற்றும் இந்தியாவின் இரண்டு இராணுவ விமானங்கள் அபிலாஷின் உலாப் படகு சிக்கியிருந்த பகுதியின் மேல் பறந்து அவரது நிலைமையை கண்காணித்ததுடன், விமானிகள் குழுவால் டொமிடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

“அவர் காயமடைந்த நிலையில் படகினுள் தங்கியிருக்கிறார், அவரால் உரிய முறையில் தொடர்புகொள்ள முடியவில்லை” என்று அவுஸ்ரேலியாவின் கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.