New year offer 2017

கனடா செய்திகள்

இருளில் மூழ்கியது கனடாவின் ஒரு பகுதி

04/10/2019

கியூபெக்கின் தென் பிராந்தியங்களைத் தாக்கிய கடுமையான உறைபனி மழை மற்றும் சூறைக் காற்றுக் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் அவதியுறுகின்றனர்.

நேற்று வீசிய கடுமையான சூறைக் காற்று, குறித்த அந்த பிராந்தியத்தில் மரக்கிளைகளை முறித்து வீழ்த்தியதில், பல இடங்களில் மின் வடங்கள் அறுந்து போனதாகவும், இதன் காரணமாக இன்று காலை நிலவரப்படி சுமார் இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கியூபெக் ஹைட்ரோ இன்று காலையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த சூறைக் காற்றினால், Laval, Lanaudiere மற்றும் Laurentians பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், Laval பகுதியில் மின் தடையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்குவதற்காக நேற்று இரவு இரண்டு நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Laval பகுதியில் மட்டும் இன்று காலையிலும் 80,000ற்கும் அதிகமானோருக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும், Lanaudiere பகுதியிலும் 90,000ற்கும் அதிகமானோர் நேற்று இரவு முழுவதும் இருட்டில் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இந்த நிலைமையைச் சீர் செய்வதற்காக, ஏனைய பாதிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்த வேலைகளும், சுத்திகரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளதாகவும் ஹைட்ரோ கியூபெக்கின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.