கனடா செய்திகள்
காணாமல் போன தந்தை ஒருவரின் சடலம் பெனின்சுலா ஏரிப்பகுதியில் கண்டெடுப்பு ஒன்ராறியோ பொலிஸ்
08/22/2019கடந்த வாரம் முதல் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொறன்ரோவைச் சேர்ந்த தந்தை ஒருவர் ஹண்ட்ஸ்வில்லே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், மாலை ஐந்து மணியளவில் பெனின்சுலா ஏரிப்பகுதியில் இருவர் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்தது. தனது கணவரும் மகனும் நீந்தச் சென்று திரும்பவில்லை என்று படகு ஒன்றிலிருந்த பெண் ஒருவர் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வேகமாக காற்று வீசியதால், குறித்த ருவரும் நீந்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து படகு அப்பால் நகர்ந்து சென்று விட்டதாகவும், படகின் இயந்திரத்தை இயக்க முடியாமையை அடுத்து குறித்த அந்தப் பெண் 911 அவசர உதவி இலக்கத்திற்கு அழைப்பு எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து ஹண்ட்ஸ்வில்லே தீயணைப்பு படையின் நீச்சல் பிரிவு, ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் நீச்சல் பிரிவு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தேடுதலின் போது குறித்த அந்தப் பெண்ணின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தந்தையைத் தேடும் பணிகள் தொடர்ந்தன.
இதனை அடுத்து நீச்சல் வீரர்கள் குறித்த நபரின் சடலத்தை மீட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ரொறன்ரோவைச் சேர்ந்த 56 வயதான மார்ட்டின் ஸ்கால்ஸ் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.