New year offer 2017

கனடா செய்திகள்

சிரிய உள்நாட்டு போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்

10/14/2019

துருக்கி படைகள் வடக்கு சிரியாவில் மேலும் முன்னேறுவதை தடுக்க, சிரிய படைகள் அந்த பகுதியில் நிறுத்தப்படுவார்கள் என குர்திஷ் நிர்வாகம் அறிவித்துள்ளது .

நேற்றையதினம் குர்துகளிற்கும், சிரிய அரசாங்கத்திற்குமிடையல் உடன்பாடு எட்டப்பட்டதாக குர்துக்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிரிய உள்நாட்டு போரில் இது மிகப்பெரிய மாற்றமாக கணிக்கப்படுகிறது.

இதன்மூலம், சிரியாவின் கணிசமான பகுதியை மீளவும் நிர்வகிக்கும் வாய்ப்பை ஜனாதிபதி அசாத் பெறுகின்றார்.

இது தொடர்பில் குர்திஷ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

துருக்கியின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்ப்பதற்காக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்துடன் தாம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதனால் சிரிய இராணுவம் சிரிய-துருக்கிய எல்லையில் சிரிய ஜனநாயகப் படைகளுக்கு (எஸ்.டி.எஃப்) உதவ முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துருக்கிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அஃப்ரின் போன்ற மற்ற சிரிய நகரங்களை “விடுவிப்பதற்கும்” இது அனுமதிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துருக்கிய இராணுவமும் அதன் சிரிய நட்பு கிளர்ச்சிப்படைகளும் குர்திஷ் படைகளை அஃப்ரினிலிருந்து 2018 ல் விரட்டியடித்தன.

துருக்கியப்படைகளின் தாக்குதலையடுத்து, அதுவரை குர்துக்களிற்கு ஆதரவாக நிலை கொண்டிருந்த அமெரிக்கா அங்கிருந்து வெளியேறி விட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஏமாற்றும் செயல் என அதிருப்தியடைந்த குர்துக்கள், தமது பரம எதிரியான சிரிய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதேவேளை, துருக்கியின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் அனடோலு வெளியிட்ட தகவலில், துருக்கி மற்றும் ஆதரவு சிரிய கிளர்ச்சிப் படைகள் சிரிய எல்லை நகரமான டெல் அபியாத்தின் மையத்திற்கு ஐந்தாவது நாளில் முன்னேறியுள்ளதாக கூறியுள்ளது.

அதேபோல துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலில், குர்துக்கள் வசமுள்ள பகுதிகளின் நிர்வாக மையமான ஹசகே மற்றும் ஐன் இசா இடையே இயங்கும் பிரதான நெடுஞ்சாலையை துருக்கிப்படைகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய குர்திஷ் அதிகாரிகளும், பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகமும் வெளியிட்ட தகவலில், நேற்றையதினம் , ராஸ் அல்-ஐனில் ஒரு தொடரணி மீது துருக்கிய வான் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் உட்பட குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, குர்துக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் தப்பிச் செல்லவோ, துருக்கிய ஆக்கிரமிற்கு அஞ்சி விடுவிக்கப்படவோ வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிற நிலையில் குறித்த பிராந்தியத்தில் ஐ.எஸ் அமைப்பை மீளுருவாக்க வழியேற்படுத்தி விடலாமென்றும் அஞ்சப்படுகிறது.

நேற்றையதினம் , துருக்கி- சிரிய எல்லைக்கு 35 கி.மீ தெற்கே உள்ள ஐன் இசாவில் சண்டைகள் நடந்தன. அங்குள்ள இடம்பெயர்ந்தவர்கள் முகாமில் சுமார் 12,000 பேர் வசிக்கின்றனர், இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள், அந்த அமைப்பிலிருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவிகள், அந்த அமைப்பிலிருந்து உயிரிழந்தவர்களின் மனைவிகள், குழந்தைகள் என சுமார் 1,000 பேர் சிறப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.