கனடா செய்திகள்
கனடாவில் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் 13 வயதுச் சிறுவன்
10/17/2019கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் வாகனமொன்றை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய 13 வயதுச் சிறுவன் ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, நோர்த் யோர்க்கின் பின்ஞ் அவனியூ தெற்கு மற்றும் டப்பரின் வீதிப் பகுதியில் சம்பவித்துள்ளது.
குறித்த சிறுவன் பாரதூரமான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்க உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது காயங்கள் உயிராபத்தானவை என்றே தோன்றுவதாகவும் மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோருக்கு தெரியாமல் குறித்த சிறுவன், தனது தந்தையின் எஸ்.யு.வி ரக வாகனத்தை செலுத்தி சென்றதாகவும் பின்ஞ் அவனியூ தெற்கு மற்றும் டப்பரின் வீதிப் பகுதியில், எரிபொருள் கொள்கலனுடனான கனரக வாகனத்துடன் மோதி வாகனத்தின் கட்டுப்பாட்டினை இழந்த சிறுவன், அதன் பிறகு வீதிச் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த கோ பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதுகுறித்து, சிறுவனின் தந்தை கூறுகையில், தனது மகனை இரவு தனது வீட்டில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தான் உறங்கச் சென்றுவிட்டதாகவும், வாகனத்தின் சாவி தனது சட்டைப் பையில் இருந்ததாகவும், அதனை அடுத்து தனது மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அழைப்பு வந்ததாகவும் விபரம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விபத்துடன் உள்ளூர் பொலிஸாரும் தொடர்புபட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாநில சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.