கனடா செய்திகள்
உலகமே எதிர்நோக்கும் 43ஆவது பொதுத் தேர்தல் - கனடாவில் மீண்டும் பிரதமராவாரா ஜஸ்டின் ட்ரூடோ
10/20/2019கனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தலை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இந்த நிலையில், எதிர்பார்ப்பு மிக்க இத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் இத்தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆண்ட்ரூ ஷீர், நியூ டெமாகிரட்டிக் கட்சியின் தலைவர் ஜக்மித் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன.
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. அரசியல் சட்ட முடியாட்சி முறையை அடிப்படையாக கொண்ட இந்த நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார்.
தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட மக்களவை மற்றும் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களை கொண்ட செனட் சபை முதலிய இரட்டை அமைப்பை இந்த நாடு கொண்டுள்ளது.
கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்களவை பொதுத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கனடாவில் மொத்தம் 338 மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
கடைசியாக, 2015ஆம் நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 184 பேர் வெற்றிபெற்றிருந்தனர்.
99 இடங்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தையும், 44 இடங்களுடன் நியூ டெமாகிரட்டிக் கட்சி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.