New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய தேர்தல் களம் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புண்டா

10/20/2019

கனேடிய தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது சூழ்நிலையில் கனடாவில் இரண்டு விதமான அரசாங்கங்கள் அமைவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒன்று, 170க்கும் அதிகமான தொகுதிகளில் ஒரே கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது. மற்றொன்று, எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாமல் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஒரு கட்சி ஆட்சியமைப்பது.

ஒருவேளை, எந்த ஒரு கட்சியும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கனடாவில் ஒவ்வொரு தேர்தலின் போதும், கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவதோடு, அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றாக, நேரலையில் மக்களின், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்து, தங்களுக்குள்ளே விவாதம் செய்யும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுவரை கிட்டத்தட்ட 40 நாட்கள் பிரசாரம் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது இதனை அடிப்படையாக கொண்டு கனடாவை சேர்ந்த முன்னணி ஊடக நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கனடிய அரசின் நிதியுதவியோடு இயங்கும் அந்த நாட்டின் மிகப் பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சிபிசி இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி,

ஜஸ்டினின் லிபரல் கட்சி 137 தொகுதிகளையும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 125 இடங்களையும், புளக் கியூபெக்வா கட்சி 39 இடங்களையும் மற்றும் ஜக்மித் சிங் தலைமையிலான நியூ டெமாகிரட்டிக் கட்சி 34 இடங்களையும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளுமே தனித்து ஆட்சியை அமைப்பதற்கு தேவையான 170 இடங்களை வெல்லாது என்ற சூழ்நிலை நிலவுகிறது.

மேலும், நிகழ்தகவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 11 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும், அதே சமயத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க வெறும் 2 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஐபாலிடிக்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில், லிபரல் கட்சியும், நானோஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டு கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எந்த கருத்துக்கணிப்பிலும் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்படவில்லை.

எனினும், மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும்போது, லிபரல் அல்லது கன்சர்வேட்டிவ் கட்சி கிட்டத்தட்ட 130 தொகுதிகளில் வெற்றிபெற்றால், அவற்றில் எது ஆட்சியமைக்கும் என்பதை இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறப்போகும் கட்சியே நிர்ணயிக்கும்.

ஆகவே நியூ டெமாகிரட்டிக் மற்றும் புளக் கியூபெக்வா ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.