New year offer 2017

கனடா செய்திகள்

மோப்ப நாய்க்கு கவுரவம் - அல் பாக்தாதி வேட்டை

11/27/2019

வாஷிங்டன்: ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை காட்டிக் கொடுத்த அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாயை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் கவுரவித்தார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த அல் பாக்தாதி 48 மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருப்பதாக கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்துக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தின் கமாண்டோ படையினர் அல் பாக்தாதியை தேடினர். அப்போது அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாயான கோனன் பாக்தாதியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து துரத்தியது. தப்பிக்க வழி இல்லாததால் தன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அல் பாக்தாதி தற்கொலை செய்தார்.

இந்த சம்பவத்தில் மோப்ப நாய் கோனன் காயமடைந்தது. அல் பாக்தாதி கொல்லப்பட்டதுமே கேனன் சாகசங்களையும் அதன் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட டிரம்ப் அந்த நாயை மிகவும் பாராட்டியிருந்தார். இந்திலையில் மோப்ப நாயான கோனன் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகைக்கு நேற்று அழைத்து வரப்பட்டது. இங்குள்ள ரோஸ் கார்டன் என்ற பகுதியில் அதிபர் டொனால்டு டிரம்ப் அவரது மனைவி மெலினியா டிரம்ப் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் கோனன் ஒய்யாரமாக 'போஸ்' கொடுத்தது.

அப்போது டிரம்ப் கூறியதாவது: நம்ப முடியாத பல சாகங்களை கேனன் செய்துள்ளது; இது நாய்களின் ஹீரோ. மிகவும் சமர்த்து. மிக மிக புத்திசாலி. இதன் சாகசத்தை பாராட்டி சான்றிதழும் பட்டயமும் வழங்கப்படும். அமெரிக்க ராணுவத்துக்கு அதிக அளவில் உதவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதன்பின் அல் பாக்தாதியை வேட்டையாடிய அமெரிக்க கமாண்டோ படையினரையும் சந்தித்த டிரம்ப் அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாயான கோனனுக்கு 4 வயதாகிறது. பெல்ஜியம் மலினோஸ் வகையைச் சேர்ந்தது. அதிபர் மாளிகைக்கு வந்தபோது கோனன் மிகவும் சாதுவாக காணப்பட்டது.