New year offer 2017

கனடா செய்திகள்

டிரம்பிடம் பறிக்க முடிவு - போர் பிரகடன அதிகாரம்

01/10/2020

வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பறிக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறி உள்ளது. அடுத்து, சென்ட் சபையிலும் இதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், டிரம்பின் போர் பிரகடன அதிகாரம் பறிக்கப்படும்.

ஈரான் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், 80 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தாலும், அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது.

இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் புரிவதையே விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிரம்ப், போர் பிரகடனம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த அதிகாரத்தை பறிக்க அந்நாட்டு பிரதிநிதிகள் சபை தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில், டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினரின் 3 பேர் அவருக்கு எதிராகவே ஓட்டளித்தனர். முடிவில், 224 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 194 பேர் எதிராகவும் ஓட்டளித்தனர். இதனால், பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறியது. செனட் சபையிலும், இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. அங்கு, இன்னும் ஓட்டெடுப்பு நடக்கவில்லை எனினும், குடியரசுக் கட்சிக்கு 53 பேரும், ஜனநாயக கட்சிக்கு 47 பேரும் உள்ளனர். இதனால், தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செனட் சபையிலும் நிறைவேறினால், டிரம்பிடம் இருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பறிக்கப்படும். எனவே, இருசபையின் ஒப்புதல் இல்லாமல் போர் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.