New year offer 2017

கனடா செய்திகள்

ஹாரி -மேகன் தம்பதியினர் கனடாவைத் தேர்ந்தெடுக்க இதுதான் காரணமாம்?

01/13/2020

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தை விட்டு விலகி கனடாவில் குடிபெயர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி முன்னிலையில் நடக்கவுள்ளது.

ஹாரி - மேகன் தம்பதி அரசக் குடும்பத்தைவிட்டு வெளியேற பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அவற்றில் சுதந்திரமும் ஊடகங்களின் வெளிச்சத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே முதன்மையானதாக உள்ளது.

இந்நிலையில், அரசக் குடும்பத்தை விட்டு வெளியேறும் ஹாரி- மேகன் தம்பதி தங்களின் மீதி வாழ் நாளைக் கனடாவில் கழிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளவரசி மேகன் தன் குழந்தையுடன் தற்போது, கனடாவில் தங்கியுள்ளார்.

ராணியுடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் ஹாரியும் அங்கு சென்று விடுவார் எனக் கூறப்படுகிறது. இவர்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமாக அந்நாட்டின் கலாசாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்று நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நெருங்கிய தோழி ஜெசிகா முல்ரோனி தன் கணவர் பென் முல்ரோனியுடன் கனடாவின் டொரொண்டோவில் வசித்து வருகிறார்.

 

 

 

மேகனின் நெருங்கிய தோழி பென் முல்ரோனி கனடா நாட்டின் முன்னாள் பிரதமருடைய மகன். இந்தத் தொடர்பில் தான் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி கனடாவுக்குக் குடிபெயர முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அரச தம்பதியினருக்குக் கனடாவில் தனியுரிமை கிடைக்கும். அங்குள்ள ஊடகங்களும் அவர்களைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால், ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருக்கலாம்.

மேலும், ஹாரி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதற்கும் கனடாவில் நிறைய இடங்கள், வழிகள் உள்ளன. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டே இவர்கள் கனடா செல்ல முடிவெடுத்திருப்பார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இல்லாமல் இளவரசி மேகனுக்கும் கனடாவுக்கும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நட்பு உள்ளது. திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி தங்களின் விடுமுறை நாள்களில் பாதியைக் கனடாவிலேயே கழித்துள்ளனர்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இவர்கள் அரச வழக்கப்படி கொண்டாடாமல் அப்போதும் கனடாவில் தனியாகக் கொண்டாடியுள்ளனர். தற்போது ஹாரி அரசக் குடும்பத்தைவிட்டு வெளியேற இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.