New year offer 2017

கனடா செய்திகள்

ஜோ பைடன் - வெள்ளை மாளிகையில் பணிகளை துவங்கினார்

01/21/2021

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜோ பைடன் ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை துவங்கியதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் நேற்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் ராணுவ குழுக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மரியாதையுடனும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்று இறந்த வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வுகள் அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை சென்று தனது அலுவலக பணிகளை பைடன் துவங்கினார்.

பதவியேற்பு விழா தொடர்பாகவும் சில முக்கிய அரசு ஆவணங்களிலும் ஜோ பைடன் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது உட்பட பல நிர்வாக நடவடிக்கைகளில் அவர் பின்னர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நெருக்கடியை சந்திக்கும் நிலைகளில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, விரைவாக பணிகளை துவங்க ஓவல் அலுவலகம் செல்கிறேன், அமெரிக்கர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்க உள்ளேன் என கூறியிருந்தார்.

15 முக்கிய கோப்புகளில் கையெழுத்து:

அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், 15 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார். இந்தச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார். அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான செயல்முறையைத் தொடங்கும் திட்டங்களுக்காகவும் பைடன் கையெழுத்திட்டார்.