கனடா செய்திகள்
கனேடிய எல்லையில் இந்தியர்களின் சடலங்கள்... வெளியான பரபரப்பு தகவல்!
01/21/2022கனடா அமெரிக்க எல்லை அருகே ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளன.
அத்துடன், அவர்கள் மொத்தம் 11 பேர் என்றும், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, அந்த நான்கு பேரும் வழிதப்பிவிட, அவர்கள் பரிதாபமாக, பனியில் உறைந்து உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
நடந்தது என்னவென்றால், புதன்கிழமை காலை, கனடா அமெரிக்க எல்லையின் அருகே, அமெரிக்க அதிகாரிகள் வேன் ஒன்றைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். அந்த வேனில் ஒரு அமெரிக்கரும், ஆவணங்கள் எதுவும் இன்றி இரண்டு இந்தியர்களும் இருப்பது தெரியவரவே, அவர்களை பிடித்து எல்லை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் அதிகாரிகள்.
அதைத் தொடர்ந்து, எல்லைக்கு 400 மீற்றர் தொலைவில் மேலும் ஐந்து இந்தியர்கள் நடந்து செல்வதைக் கண்ட அதிகாரிகள் அவர்களையும் கைது செய்துள்ளார்கள்.
தாங்கள் 11 மணி நேரமாக நடந்துகொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதிக்க, அவர்களில் ஒருவரிடம் குழந்தைகளுக்கான பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, குழந்தை எங்கே என்று அதிகாரிகள் கேட்க, தாங்கள் ஒரு கூட்டமாக வந்ததாகவும், தங்களுடன் வந்த நான்கு பேர் வழிதப்பிவிட்டதாகவும், அவர்களில் ஒரு குழந்தையும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த நான்கு பேரையும் தேடிச் செல்ல, 1.30 மணியளவில், ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் Emerson பகுதிக்கு கிழக்கே உள்ள எல்லைப் பகுதியில் கிடைத்துள்ளன. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பதின்ம வயது பையனின் உடலும் கிடைத்துள்ளது.