New year offer 2017

இலங்கை செய்திகள்

சுதந்திரக் கட்சியில் இணையும் வீரகுமார திஸாநாயக்க

12/06/2017

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி ஒன்றும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வீரகுமார திஸாநாயக்க, தேசிய சுதந்திர முன்னணி தற்போது எடுத்துள்ள அரசியல் முடிவுகளை கடுமையாக விமர்சித்து, அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க மைத்திரியும் மகிந்தவும் இணைய வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

அதேவேளை வீரகுமார திஸநாயக்க அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமையானது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் உள்ள 95 வீதமானோரின் இணக்கப்பாடுகளுடனேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. தனிநபர் அல்லது ஒரு குழுவின் தேவைகளுக்கு அமைய தீர்மானங்களை எடுப்பதில்லை எனவும் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனிடையே வீரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அமைச்சர் பதவியை பெற போவது குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.