இலங்கை செய்திகள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரத்து
01/11/2018அனுராதபுரத்தில் இதுவரை இயங்கி வந்த அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தை இரத்துச் செய்ய நீதி சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைய இந்த நீதிமன்றம் வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இரண்டு எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.
அன்றைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இந்த நீதிமன்றத்தை ஸ்தாபித்தார்.
அனுராதபுரம் விமானப்படை தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி விமானப்படைக்கு சொந்தமான 10 விமானங்களை முற்றாக அழித்ததுடன் மேலும் ஆறு விமானங்களை பாதியளவில் சேதப்படுத்தினர்.
இதில் 14 படையினர் கொல்லப்பட்டதுடன் அரசாங்கத்திற்குசுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கும், மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உட்பட 32 பேர் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கும் அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.