New year offer 2017

இலங்கை செய்திகள்

தமிழர்கள் துடிதுடித்து உயிரிழந்தார்கள் படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்

01/11/2018

ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தியதால் மின்சாரக் கம்பிகள் அறுந்து மக்கள் துடிதுடித்து உயிரிழந்தார்கள். தமிழ் மக்களுக்கு எதிராகத் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44ஆவது ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நீண்டகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதுவரை நாம் போராட்டத்திலிருந்து ஓயமாட்டோம்.

எமது இனம் மிகப்பெரிய படுகொலைகளைச் சந்தித்து வந்துள்ளது. இந்தப் படுகொலைகளில் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையானது தமிழ் மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்த அடிப்படையாக இருந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த தலைவர்கள், எமது தலைவர்கள், ஆகியோரது உரைகளை அப்பாவித் தமிழர்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது பொலிஸார் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தியதால் மின்சாரக் கம்பிகள் அறுந்து மக்கள் துடிதுடித்து உயிரிழந்தார்கள்.

பொலிஸாரின் தடியடிக்குப் பயந்து அப்பாவி மக்கள் சிதறி ஓடியபோது நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர்.

இவ்வாறு எமது வரலாற்றில் கறைபடிந்த நாளாக இந்த நாள் இருக்கின்றது.

அதேநேரத்தில் மக்கள் தமது உணர்வுகளை இதுபோன்ற நினைவு தினங்களில் வெளிக்காட்ட வேண்டும். மேலும், இந்தப் படுகொலைகளுக்கு நீதியாக இறுதித் தீர்வு எட்டும் வரையில் ஓயமாட்டோம் எனவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.