இலங்கை செய்திகள்
வெற்றி பெற்றாலும் கவலைப்பட வேண்டிய விடயமும் உண்டு
02/12/2018தமக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களுக்கு முகங்கொடுத்திருந்தது.
அதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பினும் தேர்தலுக்கு முந்திய தினங்களில் பணம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், போதைப்பொருட்கள் வழங்கும் செயற்பாடுகளில் பல கட்சிகள் செயற்பட்டன.
இவற்றை மூலதனமாகக் கொண்டு அவர்கள் செயற்பட்டது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மக்கள் தங்கள் வாக்குகளை இயல்பாக வழங்க வேண்டும் என்ற முறையை இது பிறவழிப்படுத்துகின்ற செயலாக இருந்தது. இதனால் எமது வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
இதனால் எங்களுக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டார்கள் என்பது ஜனநாயகத்திற்கான பெரிய சவாலாகும்.
அதிகளவான பணப்புழக்கங்கள் இருந்தன. இந்த நிலைமைகளைக் கூட எதிர்கொண்டு எமது மக்கள் தங்கள் ஆதரவை எமக்குத் தான் வழங்கியிருக்கின்றார்கள். ஓரிரண்டு சபைகளைத் தவிர ஏனைய எல்லாச் சபைகளிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றோம்.
சுமார் 40 சபைகள் எமது ஆதிக்கத்திற்குள் வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் புதிதாக வந்திருக்கின்ற தேர்தல் முறை இதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. இதில் மஹிந்தவாக இருந்தாலும் சரி ஏனைய தலைவர்களாக இருந்தாலும் சரி புதிய அரசியல் அமைப்புத் தேவை என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.