New year offer 2017

இலங்கை செய்திகள்

நாட்டு மக்களுக்கு முக்கிய விடயங்களை தெரிவிக்கவுள்ள ஜனாதிபதி

02/12/2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தி முக்கிய விடயங்களை தெரிவிக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி கூட்டணி அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைள், தற்போதைய அமைச்சரவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சம்பந்தமாக சில முக்கியமான விடயங்ளை வெளியிட ஜனாதிபதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய அடிப்படையான வாக்குறுதிகள் குறித்து கவனம் செலுத்தி, அடுத்த இரண்டு வருடங்களில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதிக்கு அவரது ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி நடுநிலையாக செயற்பட வேண்டும் எனவும் ஜனவரி 8ஆம் திகதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கவும் பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி தலையிட வேண்டும் என ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஊழல், மோசடியாளர்களை பிடிப்பதாக வழங்கிய வாக்குறுதியை கடந்த 3 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக அரசாங்கத்திற்குள் தெளிவான உரையாடல்களை மேற்கொண்டு ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு அவரது ஆலோசகர்கள் யோசனை கூறியுள்ளனர்.

மேலும் அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரின் பதவிகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் ராஜபக்ச ஆதரவாளர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஜனவரி 8ஆம் திகதி வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி செயற்பட ஜனாதிபதி தயாராக இருந்தால், அவருக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க தாமும் தயாராக இருப்பதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும் 30 அமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவை மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நல்லாட்சி கொள்கைகளை செயற்படுத்தினால், 2020 ஆம் ஆண்டில் மக்களின் ஆணையை பெறுவது சிரமமானதாக இருக்காது எனவும் சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.