New year offer 2017

இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைகுழுவுக்கு கடிதம் எழுதிய வடமாகாண சபை உறுப்பினர்

02/12/2018

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது இன, மத குரோதங்களுக்கு வழி வகுக்கும் என்பதுடன் நல்லிணக்கத்தை பாதிக்கும் எனத் தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணைகுழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,

வடகிழக்கில் 1000 விகாரைகளை கட்ட 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க கூறியுள்ளது. இது உண்மையில் மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் பாரிய குரோதத்தை உருவாக்கும். அதேபோல் நல்லிணக்கத்தினையும் பாதிக்கும்.

எனவே இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர் ஒருவர் 'தேர்தல் காலத்தில் இந்து அமைப்புக்கள் கண்டனம்" என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாகவும்,

கட்சி ஒன்றுக்கு வாக்களிக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கேட்கும் தோரணையில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.