New year offer 2017

இலங்கை செய்திகள்

வட மாகாண சபையில் பசுபதிப்பிள்ளை கூறிய கதை

03/13/2018

வட மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரனுக்காக கதையொன்றை கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 118ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கதையை கூறுகையில்,

“ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தானாம். அந்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாளாம். அந்த மகளுக்கு மன்னன் மணமகன் தேடினான்.

அப்போது மன்னன் தன் அமைச்சர்களை அழைத்து 100 அறிவுகளுள்ள மணமகன் வேண்டும் என கேட்டானாம்.

அதற்கமைய அமைச்சர்களும் 100 அறிவுகளுள்ள மணமகன் தேடி அலைந்து களைத்துபோன நிலையில் மீண்டும் மன்னனிடம் வந்து 100 அறிவுகளுள்ளமணமகனை தேடி பிடிக்க முடியவில்லை.

ஆனால் 98 அறிவுகளுள்ள மணமகனை தேடி பிடித்துள்ளோம் என கூறினார்கள். சரி பரவாயில்லை. 2 அறிவுகள் தானே குறைகின்றன என கூறிய மன்னன், அமைச்சர்கள் காட்டிய அந்த மணமகனை தனது மகளுக்கு மணம் முடித்து கொடுத்தார்.

திருமணம் முடிந்த பின்னர் அமைச்சரை அழைத்த மன்னன் மணமகனுக்கு 98 அறிவுகள் உள்ளன. 2 அறிவுகள் தான் குறைகின்றன என கூறியிருந்தீர். அவரிடம் இல்லாத அந்த 2 அறிவுகளும் எவை? என வினவினாராம்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சொல் புத்தி மற்றும் சுய புத்தி ஆகிய இரு அறிவுகளும் மணமகனுக்கு இல்லை என கூறினாராம்.

அப்படித்தான் இங்கேயும் நிலைமை உள்ளது என கூறினார். இதனையடுத்து சிறிதுநேரம் அவையில் சிரிப்பொலி மேலிட்டது.

பின்னர் ஒருவாறாக அது அமைதியடைந்தது. குழப்பங்கள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பசுபதிப்பிள்ளை கூறிய கதையினால் கல்வி அமைச்சருக்கு சொல் புத்தி, சுய புத்தி இல்லையா? என்ற கேள்வியும் மேலெழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.