New year offer 2017

இலங்கை செய்திகள்

அரசின் தடுமாற்றம் இப்போது வெளிப்படுகின்றது முன்னாள் முதலமைச்சர் சாடல்

05/16/2018

யுத்தச் செலவுகளுமில்லை, கெடுபிடி நெருக்கடிகளுமில்லை பாரிய அபிவிருத்திகளுமில்லாத சூழ்நிலையில் எரிபொருள் விலையேற்றம் எதற்கு? அரசாங்கம் உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல் தடுமாறுவதையே இது காட்டுகின்றது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

நல்லாட்சி என நம்பி இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர்களில் அநேகமானோர் பாட்டாளி வர்க்கத்தினர்தான்.

ஆனால், இந்த நல்லாட்சி அரசு பாட்டாளி மக்களுக்கான திட்டமிட்ட உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அதுபற்றிச் சிந்திக்கவும் இல்லை.

நாட்டிலுள்ள புத்திஜீவிகளின் மனித வளம் பயன்படுத்தப்படாததால் அவர்கள் புலம்பெயர வேண்டியேற்பட்டுள்ளது.

அதேநேரம் ஆண்களும் பெண்களுமான இலங்கையின் சாதாரண தொழிலாளர் படையினரில் பெரும்பகுதி மத்திய கிழக்கில் முடங்கிப் போயுள்ளது. நாட்டு வளங்கள் சர்வதேச முதலாளி வர்க்கத்துக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

ஏழைகள் மீதே வரி அறவிடப்படுகின்றது. எடுத்ததற்கெல்லாம் வரி அறவிடும் வங்குரோத்துப் பொருளாதார நிலையில் அரசு தடுமாறுகிறது.

உள்ளூர் வளங்களை உச்ச மட்டத்திற்குப் பயன்படுத்தும் எந்தவிதமான சாத்தியவள ஆய்வுகளும் திட்டங்களும் அரசிடம் இல்லை.

இப்பொழுது நாட்டில் யுத்தம் இடம்பெறவில்லை. எனவே யுத்தத்திற்குச் செலவழிக்கப்பட்ட நிதி அபிவிருத்திக்குச் செலவு செய்யப்படலாம். ஆனால், தூரநோக்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் அரசிடமில்லை.

அடிமட்ட மக்களின் வயிற்றிலடிக்கும் எரிபொருள் விலையேற்றத்தை அரசு கண்மூடித் தனமாக மேற்கொண்டுள்ளது.

எரிபொருளுக்கான அதிகரித்த திடீர் விலையேற்றம் அனைத்துப் பொருட்களுக்குமான மறைமுக விலை ஏற்றத்திற்குக் காரணமாக அமைந்து விடும் என்பது அரசுக்குத் தெரியாவிட்டாலும் அடிமட்ட மக்களுக்கு நன்கு தெரியும், அதன் முதலாவது விளைவாக இப்பொழுது போக்குவரத்துக் கட்டணங்கள் கிட்டத்தட்ட 7 சத வீதத்தினால் உயர்ந்துள்ளன.

ஆனால் அதுவும் போதாதென்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தயாராகிறார்கள். அரசு தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறது என்பதை நடப்பு நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசுக்கு முன்னால் உள்ள பொறுப்புக் கூறவேண்டிய பணிகளை அரசு தட்டிக் கழித்து விட்டு இப்பொழுது கவனத்தை எங்கோ திசை திருப்புகிறது. மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றார்கள். அரசு தடம்புரண்டு பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.