New year offer 2017

இலங்கை செய்திகள்

பெரும் ஏக்கத்துடன் வாழும் சூழ்நிலையில் தமிழ் மக்களின் நிலை வியாழேந்திரன்

06/12/2018

எனது வீட்டு முற்றத்திற்கு நாளை யார் உரிமை கொண்டாடுவார்கள் என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள் இன்று வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு தலைமையேற்று நடாத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது, தொழிற்சாலையின் சகல நடவடிக்கையினையும் இடை நிறுத்தவேண்டும் என்று அப்பகுதியில் உள்ள அமைப்புகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தொழிற்சாலை அமைக்கப்படுமானால் ஒரு நாளைக்கு 10000ஆயிரம் லீற்றர் வீதம் ஒரு வாரத்திற்கு எழுபதாயிரம் லீற்றர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். அதற்கு மேலும் உறிஞ்சப்படலாம். அவ்வாறு நீர் உறிஞ்சப்படுமானால் அந்த பகுதி மூன்று நான்கு வருடங்களில் பாலை வனமாக மாறும். இது முற்றுமுழுவதுமான விவசாய பகுதியாகும்.

இந்த தொழிற்சாலை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகின்றது, மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதன் காரணமாக குடிநீர்த்தட்டுப்பாடும் இப்பகுதியில் ஏற்படும்.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையானது ஒரு வருடத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேலாக பிளாஸ்டிக் தாங்கி வைத்து நீர் வழங்கும் பகுதியாக அது உள்ளது. அந்த இடத்தில் இந்த தொழிற்சாலைக்கான கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை பிரதேசசபையின் செயலாளர் வழங்கியுள்ளார்.

அதுமட்டுமன்றி மத்திய சுற்றாடல் அதிகாரசபை, பிரதேசசபை உட்பட சில திணைக்களங்கள் சரியான கள ஆய்வினை மேற்கொள்ளாமல, அப்பகுதி மக்களுடன் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடாமல் , அப்பிரதேச செயலாளருடன் கலந்துரையாடாமல், பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் அனுமதியை பெறாமல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது அப்பகுதி மக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகமான செயல். இவர்கள் அங்கு நீரை உறிஞ்சவில்லை ,அப்பகுதி மக்களின் இரத்ததினை உறிஞ்சப்போகின்றார்கள்.

கடந்த திங்கட்கிழமை அப்பகுதி மக்கள் நடாத்திய ஜனநாயகமயப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையும் கருத்தில்கொள்ளப்படாமல் அந்த தொழிற்சாலை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அதற்கு அனுமதிவழங்குவதில்லையென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கான அனுமதியை வழங்கிய அரச திணைக்களங்களின் அதிகாரிகளின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துடன் உயிருடன் நடக்கும் போராட்டம்.

குறித்த பகுதியில் உள்ள பெருவட்டை என்னும் குளம் தனி நபர் ஒருவரினால் அடைக்கப்பட்டுள்ளது. அது கமநல திணைக்களத்திற்குரிய குளமாகும்.படுவான்கரையின் எல்லைப்பகுதிகளில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளிலே திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கப்படுகின்றது.

அரசாங்க அதிபருக்கு பிரதேச செயலாளருக்கு எந்தவித அறிவித்தலும் வழங்காமல் வனஇலாகா தங்களுக்குரிய இடமாக கல்களை நட்டு அப்பகுதிகளை அடையாளப்படுத்துகின்றனர். இந்த செயற்பாட்டினை அவர்கள் தொடர்ந்து செய்வார்களானால் படுவான்கரையில் உள்ள 50வீதமான மக்கள் கடலில் வீழ்ந்து சாகும் நிலையே ஏற்படும்.

கொழும்பில் இருக்கும் சில திணைக்களங்கள் இங்குள்ள அதிகாரிகள் மக்களின் உண்மையான நிலையினை அறிந்து செயற்படாமல் வழங்கும் தீர்மானங்கள் இந்த தொழிற்சாலையுடன் எடுத்த இறுதி தீர்மானமாக இருக்கவேண்டும்.

நாளை எனது வீட்டு முற்றத்திற்கு யார் உரிமை கொண்டாடுவார்கள் என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள் இன்று வாழ்ந்துவருகின்றனர். அந்த நிலை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.இதுதான் இந்த மாவட்டத்தின் முதலும்முடிவுமான சம்பவமாக இருக்கவேண்டும்.

சுற்றாடலுக்கு பொறுப்பாக இருப்பவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகும். அவர் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு அந்த தொழிற்சாலைக்கு மூடுவிழா செய்யவேண்டும் என்றார்.