இலங்கை செய்திகள்
விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு சஜித் மற்றும் நவீன் தயாராக இருக்க வேண்டும்
06/13/2018முதன்முறையாக கதிர்காம புனித பூமியில் பௌத்த துறவிகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் பாதாள உலகக்குழு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இது மிகவும் ஆபத்தான சம்பவம்.
இந்த உலகத்திலேயே மிகப் பெரிய திருடர்கள் கதை “அலிபாபாவும், 40 திருடர்களும்” என்று சிறுவயதிலிருந்து நாம் கேட்டு இருக்கின்றோம்.
ஆனால் தற்போது இதையும் விட மற்றுமொரு கதை உள்ளது. அதுதான் “அலிபாபாவும் 118, திருடர்களும்” கதை.
3 மாகாணங்களுக்காக ஆயுட்காலம் முடிந்து 9 மாதங்களாகி விட்டது. இது வரை மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை என்பதையும் டளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்குமாறு டி.எம்.சுவாமிநாதனால் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டது.
6 மாதங்களுக்கு முன்பும் கொண்டு வந்தார். மீண்டும் நேற்றும் கொண்டு வந்தார். இதனால் தனது தந்தையை கொன்ற கொலைகாரர்களுக்கு இழப்பீடு வழங்க சஜித் பிரேமதாச தயாராக இருக்க வேண்டும்.
அதேபோல் காமினி திஸாநாயக்கவை கொலை செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நவீன் திஸாநாக்க தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு பாரதூரமான நிலையிலேயே தற்போது நாடு இருக்கின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.