New year offer 2017

இலங்கை செய்திகள்

ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

07/09/2018

நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபரை விடுதலை செய்ய முடியும் என ஜனாதிபதி செயலகம், வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரனுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் குண்டு தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த ஆனந்த சுதாகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆனந்த சுதாகரனின் மனைவி புற்று நோயினால் உயிரிழந்த போது இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு சுதாகரனுக்கு சிறைச்சாலை திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் சுதாகரனின் மகள் தந்தையுடன் சிறைக்கு செல்ல முயற்சித்த சம்பவம் ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

எனவே நீதிமன்ற செயன்முறைக்கு அமையவே குறித்த நபரை விடுதலை செய்ய முடியும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்க தயாரில்லை என்பது தெளிவாகின்றது என பலரும் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி ஏற்கனவே பல ஊடகங்களிலும் வெளிவந்திருந்த நிலையில் தற்பொழுது தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.