New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கையிலுள்ள கிராமமொன்றின் மக்களுக்கு நேர்ந்துள்ள அவலம்: பிரேதத்தை 5 கிமீ சுமந்து செல்லும் நிலை

07/11/2018

அம்பாறை - பொத்துவில், செங்காமம் கிராமத்தில் வாழும் மக்களின் பிரேதங்களை அடக்கம் செய்வதில் தொடர்ந்தும் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

செங்காமம் கிராம மக்கள் பிரேதங்களை 5 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பொத்துவில் இந்துமயானத்திற்கு சுமந்து கொண்டு சென்று அடக்கவேண்டிய அவல நிலையுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் தமக்கென ஒரு மயானத்தை அமைத்துத்தர வேண்டும் என பொத்துவில் பிரதேசசபை மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றிடம் தொடர்ச்சியான கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

எனினும் அந்த கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் மயானத்திற்கான காணி ஒதுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்தீபனிடம் கேட்டபோது,

இந்த விடயம் உண்மை. அந்த மக்களின் நியாயமான ஆதங்கம் இது. இது தொடர்பில் நாம் எமது பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத்திடம் மனு செய்தோம்.

அவரும் அதனை ஏற்றுக்கொண்டு கடந்த மே மாதம் 06ஆம் திகதி பொத்துவில் பிரதேச செயலாளருக்கு எழுத்துமூலம் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதன் பிரதிகளை எமக்கும் அனுப்பியிருந்தார்.

ஆனால் பொதுமக்கள் கூறுவதுபோன்று இன்னும் மயானம் அமைக்க காணி ஒதுக்கப்படவில்லை. விரைவில் அவருடன் தொடர்பு கொண்டு இவ்வேலையை முடித்துதருமாறு கேட்கவிருக்கின்றேன்.

அண்மையில் பொத்துவில் செங்காமம் கிராமத்தில் சிங்கள சகோதரர் ஒருவர் காலமாகிவிட்டார். ஆனால் அவரின் பூதவுடலை அடக்கம் செய்வதில் பாரிய சிக்கல் எழுந்தது.

காரணம் அங்கு தமிழ், சிங்கள இனத்தவர்கள் வசிக்கின்ற போதும் அவர்களுக்கான பொதுமயானம் இல்லை. அங்கு இருப்பது முஸ்லிம் இனத்தவரின் மையவாடி மாத்திரமே.

அதனால் காலம்சென்றவரின் பூதவுடல் அடக்கம் செய்வதில் உண்டான சிக்கல் காரணமாக பிரதேசசபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும். இல்லாவிடில் பிரேதத்தை 5 கி.மீ தள்ளியுள்ள பொத்துவில் பொதுமயானத்திற்கு தான் கொண்டுவர வேண்டும். இது பாரிய சிரமம்.

ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும். மரணம் எல்லோருக்கும் பொதுவானது. எனவே யாராயினும் மனிதாபிமானத்துடன் அணுகி 5 கி.மீ சிரமத்தை தவிர்த்து சொந்த இடத்திலேயே அடக்கம் செய்ய வழிவகுக்குமாறு வேண்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.