New year offer 2017

இலங்கை செய்திகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு

08/08/2018

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் பரந்து வாழும் டயஸ்போராக்களுக்கிடையில் நிலவும் கருத்துவேறுபாடுகளை இனங்கண்டு, அவற்றை களைவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி செய்கின்றது.

நாட்டை விட்டுச் சென்று வேறு நாடுகளில் வாழ்பவர்களையே நாம் டயஸ்போரா என அழைக்கின்றோம். இவர்கள் வெளிநாடுகளில் இருந்தபடி எமது நாட்டின் சமூகத்தினர் மற்றும் ஆட்சியில் பாரிய பங்களிப்பு செலுத்தி வருகின்றனர்.

பல நாடுகளில் வாழ்ந்து வரும் இவர்களின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர்கள் சிறுபான்மையைச் சேர்ந்தவராகவோ அல்லது பெரும்பான்மையைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றன.

இதில் நாட்டுக்கு பயனளிக்க கூடியதனை கண்டறிந்து அதனை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு இராணுவத்திடமே உள்ளது. வடக்கு கிழக்கு மக்களுக்காக எமது இராணுவத்தினர் தொடர்ச்சியாக நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் நடத்தப்படவுள்ள கொழும்பு செயலமர்வில் இலங்கை இராணுவத்தின் மேற்படி ஆர்வம் மற்றும் விருப்பத்தை வெளிநாட்டுப் பிதிநிதிகள் மூலம் அந்நாட்டில் வாழும் டயஸ்போராவிடம் கொண்டு சேர்ப்பதே இலங்கை இராணுவத்தின் விருப்பமாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.