New year offer 2017

இலங்கை செய்திகள்

யாழில் பயங்கரவாதி எனக்கூறி ஒருவரை கொலை செய்த இராணுவத்தினருக்கு இளஞ்செழியன் கொடுத்த வரலாற்று தீர்ப்பு

08/08/2018

யாழ்ப்பாணத்தில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்த குற்றத்திற்காக இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998.09.10ஆம் திகதி, ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை பயங்கரவாதி என்று குறிப்பிட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்ற இராணுவத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் லெப்டினன் கேணல் தொணி பாட்டமியூஸ், மேஜர் டிக்ஸன் ராஜமந்திர மற்றும் பியதாசகே பிரியந்த ராஜமந்திர என்ற 3 இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் இரண்டாவது எதிரியான மேஜர் டிக்ஸன் ராஜமந்திர மற்றும் மூன்றாவது எதிரியாக பியதாசகே பிரியந்த ராஜமந்திர என்ற இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி வரலாற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைகள் ஆரம்பத்தில் மேன்முறையீட்டு நிதிமன்றின் அனுமதியுடன் அநுராதபுரம் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அந்த வகையில் குறித்த வழக்கு இன்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் நபரின் உடலில் 21 இடங்களில் காயம் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக இராணுவத்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது குற்றம் சுமத்தப்பட்ட மூன்று இராணுவ வீரர்களில் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.