New year offer 2017

இலங்கை செய்திகள்

வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவார் மகிந்த

03/20/2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை நிறுத்தப் போவதாகவும் அவரை வெற்றி பெற செய்யும் பொறுப்பை மக்களிடம் ஒப்படைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெஹிஹோவிட்ட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

“ ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் இனவாதத்தை இந்நாட்டில் இருந்து ஒழித்து சகல இன மக்களும் அவர்கள் விரும்பிய மதத்தை கடைபிடிக்கும் உரிமையை பெற்றுக்கொடுப்போம். இந்த அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்யவில்லை.

ஹெரோயின் போதைப் பொருள் கிராமத்திற்கு வந்துள்ளது. போதைப் பொருளை பயன்படுத்தும் அமைச்சர்கள் இருப்பதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

ஆனால் எங்கள் அணியில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் இல்லை என்பதை பொறுப்புடன் கூறுகிறேன். போதைப் பொருளில் இருந்து நாட்டை மீட்க வேண்டும்.

ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. பிரதமர் தனக்கு தேவையான வகையில் செயற்படுகிறார். நாடு அதளபாதாளத்திற்கு சென்றுக்கொண்டிருக்கின்றது. அதிக வட்டிக்கு கடனை பெறுகின்றனர்.

நாட்டை நஷ்டத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த கடனை செலுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எங்களால் முடியும். நாங்கள் சொன்னத்தை செய்து காட்டினோம்” என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.