New year offer 2017

இலங்கை செய்திகள்

தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரிப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் தயாசிறிக்கு பதிலளித்த சபாநாயகர்

07/09/2019

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது அதனை ஏற்காவிட்டால், அது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என கருத முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் தெரிவுக்குழு சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினை எழுப்பிய கருத்து வெளியிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் போதே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகுமாறு இரண்டு முறை தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இந்த தெரிவுக்குழுவை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு முரணானது என தான் கருதுவதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், இது குறித்து நாடாளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்துமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடனேயே இந்த விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. 20 வருடங்களுக்கு முன்னர் நிலையியல் கட்டளைச் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

ஊடகங்களை அழைக்கும் அதிகாரங்களை நாங்கள் தெரிவுக்குழுக்களுக்கு வழங்கியுள்ளோம். உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய தெரிவுக்குழுவின் தலைவர் செயற்பட முடியும்.

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் தொடங்கிய பின்னரே வழக்கு தொடரப்பட்டது. தேவையான இடங்களில் நான் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டேன்.

இதனால், தயாசிறி ஜயசேகர விசாரணைகளில் கலந்துக்கொள்வது உசிதமானது என நான் கருதுகிறேன். நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டது.

தெரிவுக்குழு அழைக்கும் நபர், விசாரணைகளுக்கு செல்லவில்லை என்றால், அது நாடாளுமன்றத்தை அவமதித்ததாக கருதப்படும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.