New year offer 2017

இலங்கை செய்திகள்

14 ஆண்டுகளுக்கு பின் எமது வேட்பாளர் போட்டியிடுகிறார் நவீன் திஸாநாயக்க

10/21/2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இம்முறை போட்டியிடுவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஹட்டன் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

எனது தந்தை காமினி திஸாநாயக்க தேர்தலில் போட்டியிட்ட போது இப்படியான மக்கள் கூட்டம் அவருக்கும் இருந்தது. அப்போது அவருக்கும் 52 வயது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார், அவருக்கும் 52 வயது. சஜித் பிரேமதாச மிகவும் எளிமையான நபர். அன்று காமினி திஸாநாயக்கவுக்கு ஒரு அடியை முன்நோக்கி எடுத்து வைக்க வேண்டிய தேவை மட்டுமே இருந்தது. இம்முறை சஜித் பிரேமதாச அந்த அடியை முன்நோக்கி எடுத்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை 14 ஆண்டுகளுக்கு பின்னர் நிறுத்துகிறோம். இதுவரை காலமும் வேட்பாளர்களை அழைத்து வந்து வாக்குகளை பெற்றுக்கொடுத்தோம். எனினும் எமது கட்சியை சேர்ந்த ஒருவர் மீதுள்ள நம்பிக்கை அவர்கள் மீதில்லை. அவர்களுக்கு எம்மை பற்றிய உணர்வு இல்லை.

இதன் காரணமாகவே இம்முறை எமது தலைவரை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அந்த தலைவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது எங்களது நம்பிக்கை.

சஜித் பிரேமதாச என்பவர் வறிய மக்களுக்காக குரல் கொடுக்கும் மனிதர். அவரது தந்தையான ரணசிங்க பிரேமதாசவே அன்று வறிய மக்களுக்காக ஜனசவிய உதவியை பெற்றுக்கொடுத்தார். பல வறிய மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். 200 ஆடை தொழிற்சாலைகளை திறந்து வைத்தார் என நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.