New year offer 2017

இலங்கை செய்திகள்

கோத்தபாய வென்றால் என்ன நடக்கும்

10/28/2019

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றியீட்டினால் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும் என்பதனை அவரது சட்டத்தரணி விளக்கியுள்ளார்.

கோத்தபாயவின் சில முக்கிய வழக்குகளின் போது அவரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அலி சாப்ரீ இதனை விளக்கியுள்ளார்.

இது தொடர்பிலான காணொளியொன்று இணையத்தில் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மக்களுடன் நாம் நல்ல உறவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தேசிய கீதத்தில் குறிப்பிடப்படுவது போன்று ஒரு தாய் மக்களாக வாழ வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் 1990ம் ஆண்டில் 24 மணித்தியாலங்களில் 77000 முஸ்லிம்கள் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டி விட்டதாகவும் சிங்கள மக்களின் வாக்குகளே அவருக்கு போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வெற்றியில் நாங்களும் ஓர் பங்காளியாக இருக்க வேண்டும் என்றே தாம் முஸ்லிம் மக்களிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

“அப்படி வாக்களிக்காட்டி என்ன நடக்கும் ஹம்பானைக்கு கிடைக்கும்” அதாவது முஸ்லிம்கள் வாக்களிக்காது கோத்தபாய வென்றால் செம்மையாக வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டிவரும் என சட்டத்தரணி அலி சாப்ரீ தெரிவித்துள்hளர்.

இவ்வாறான ஒர் உரையானது குரோத உணர்வைத் தூண்டுவதாகவும் அச்சுறுத்தும் வகையிலாதாகவும் அமைந்துள்ளது என பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது உரையின் ஒரே பகுதியை மட்டும் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தமது உரையில் அவ்வாறு குரோத உணர்வைத் தூண்டவில்லை எனவும் அலி சாப்ரீ முகநூலில் பதிவிட்டுள்ளார்.