New year offer 2017

இலங்கை செய்திகள்

துணிவும் துணிச்சலும் இல்லாதவர்கள் கோத்தபாய சஜித்தை கடுமையாக சாடியுள்ள விக்னேஸ்வரன்

10/29/2019

தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எந்த பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளாமையானது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துகின்றது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்து முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர்களுக்கு சுபிட்சமான எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றலும், ஆளுமையும், துணிச்சலும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் இல்லை.

தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளையும் எந்த பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளாமை மேற்சொன்ன விடயத்திற்கு சிறந்த உதாரணம்.

இதனூடாக தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளை வழங்கி இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் எண்ணம் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் இல்லை என்பது புலப்படுகிறது.

எனினும் தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள 13 யோசனைகளை நியாயம் என கருதி ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய மாத்திரம் ஏற்றுக்கொண்டுள்ளமையை வரவேற்கிறேன்.

எதிர்வரும் 31 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழர் தரப்பு முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க எந்தவொரு வேட்பாளரும் இதுவரை தயாராக இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது கடந்த கால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக, புற சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே சர்வதேச சமூகம் இனிமேலும் இலங்கை அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளை நம்பமால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுகொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.