New year offer 2017

இலங்கை செய்திகள்

தம்பிக்காக தரம் தாழ்ந்து போன மஹிந்த அமைச்சர் அஜித் பி பெரேரா

10/31/2019

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுஜன பெரமுனவினர் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு இம்முறை தேர்தலில் வாக்குகளைப் பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா நேற்று தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

வரவிருக்கும் தேர்தலுக்கான ஆதரவைப் பெறுவதற்காக, இப்போது கொலை குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கருணா அம்மானின் துணை பிள்ளையானை விடுவிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் ஒரு ஆபத்தான பயங்கரவாதி, அவர் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பல அட்டூழியங்களைச் செய்துள்ளார், மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தவரும் ஆவார்.

ஆனால் ராஜபக்ஸர்கள், பிள்ளையான் போன்ற பயங்கரவாதியின் விடுதலையிலே தம் வாக்குகள் உள்ளது என்பதை காட்டி தங்களுக்கு எந்தவிதமான தார்மீகப் பண்புகளும் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர் . அவர்களின் நகர்வுகளில் ஒரு ஆபத்து உள்ளது. அவர்கள் வெற்றிபெற எதையும் செய்வார்கள்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எந்தவிதமான உடன்படிக்கைகளையும் செய்ய மாட்டார். அடிமட்டத்தில் இருக்கும் சாமானிய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்துள்ளதால் அவரே வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை முழுமையாகப் பெறுவார்.

வேட்புமனுவைப் பெறும்போது சஜித் பிரேமதாச எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் தலைவணங்கவில்லை. எனவே, அவர் சாதாரண மனிதர்களின் சக்தியையும் அவரது தொலைநோக்கு கொள்கைகளையும் பயன்படுத்துவதால் எந்தவொரு ஒப்பந்தங்கள் அல்லது நிபந்தனைகளைப் பற்றியும் அவர் கவலைப்படத் தேவையில்லை. உறுதி செய்யப்பட்ட சஜித் பிரேமதாசவின் வெற்றியை எந்த அரசியல் கட்சிகளும் தடுக்க முடியாது.

சஜித் பிரேமதாச, மீண்டும் ஒரு நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு கோத்தபாய ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

கம்மன்பில போன்ற கைப்பொம்மைகளை அனுப்பாமல், கொள்கை விவாதங்களின் கருத்தை இழிவுபடுத்தாமல் ஒரு வேட்பாளராக தனது கொள்கைகளின் நடைமுறைத்தன்மையை விளக்கும் அளவுக்கு கோத்தபாய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கோத்தபாய இந்த விடயத்தில் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்து ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று ஒரு பதிலை முன்வைக்க வேண்டும்.

கோத்தபாய மீது சேறு பூசும் எண்ணம் எமக்கு இல்லை. என்ன நடக்கிறது என்பது கோத்தபாயவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த உண்மையை வெளிப்படுத்துவதாகும். கோத்தபாய ராஜபக்ஸவைத் தோற்கடிக்க எங்களுக்கு வீடியோக்களோ, சதிகளோ, ஆதாரங்களோ தேவையில்லை.

நம் அனைவருக்கும் அடிப்படையில் அவருடைய நடத்தை முறைகளை வைத்தே அவரைப் பற்றி அறிந்து கொள்ளமுடியும். முழு நாடும் அவரது வரலாற்றையும் ஆதாரமற்ற கொள்கைகளையும் நன்கறியும். நாட்டில் எங்கு என்ன இருக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது. அவருக்கு பயத்தை பரப்பும் பழக்கம் மட்டுமே உள்ளது, என்று கூறினார்.