New year offer 2017

இலங்கை செய்திகள்

பெப்ரல் அமைப்பு - வாகனங்களுக்கான அதி கூடிய விலையை நிர்ணயித்து சுற்று நிரூபம் வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

02/11/2020

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட அரசியல் தலைவர் , அரச அதிகாரிகள் கொள்வனவு செய்யக் கூடிய வாகனங்களுக்கான அதி கூடிய விலையை நிர்ணயித்து சுற்று நிரூபமொன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ள பெப்ரல் அமைப்பு, அரச நிதி , சொத்துக்கள் என்பன வீண்விரமாக்கப்படுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றோஹண ஹெட்டியாராச்சி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி; வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 4 தசாப்தங்களாக மக்கள் பிரதிநிதிகள் அதி சொகுசு வாகனங்களை பாவிப்பது பெருமளவில் அதிகரித்துள்ளது.

பொருளாதார ரீதியில் வெளிநாட்டுக் கடன்களில் சென்று கொண்டிக்கும் நாடொன்றுக்கு இது பொறுத்தமான விடயமல்ல. அண்மையில் பாராளுமன்றத்தில் இவ்வாறு சொகுசு வாகனங்களுக்காக செலவிடப்பட்டுள்ள தொகை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அரச தலைவர் என்ற ரீதியில் அரச நிதி வீண்விரமாக்கப்படல் மற்றும் பொது சொத்துக்கள் பாவனை தொடர்பில் நீங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கின்றோம்.

அதே போன்று உங்களது ஆட்சி காலத்தில் இவ்வாறு அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கோ அல்லது அரசி நிதி அநாவசியமாக செலவளிக்கப்படுவதற்கோ இடமளிக்கமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

மக்களுக்கான அபிவிருத்தி திட் டங்களை முன்னெடுக்கும் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்வாறு சொகுசு வாகனங்களை பாவித்தல் தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவில்லை என்பதற்காக மேலும் இது போன்ற விடயங்கள் தொடராமல் இருப்பதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

உயர்மட்ட பதவிகளை வகிக்கின்ற அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோர் வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அதற்காக ஒரு வாகனத்துக்கு செலவிடக் கூடிய அதிகூடிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அத்தோடு தற்போது பாவித்துக் கொண்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி புதிய வாகனங்களை கொள்வனவு செய்தல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கி சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.