New year offer 2017

இலங்கை செய்திகள்

கபே அமைப்பு - தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்

02/12/2020

எதிர்வரும் தேர்தலின் போது தனியார் நிறுவன ஊழியர்களும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான அனுமதியை வழங்கவேண்டும் எனக் கோரிவிடுத்துள்ள கபே அமைப்பு,தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது பொதுத் தேர்தல்கள், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் வாக்களிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் குறைவாக உள்ளனர். 

இந்நிலையில், தலைநகரம் மற்றும் ஏனைய பிற முக்கிய நகரங்களில்  தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவார்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று  வாக்களிக்கத்  தயக்கம் காட்டுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளின் தூரத்திற்கு ஏற்ப தனியார்த் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை வழங்க ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், அதிக தூரத்தில் குடிபெயர்ந்து வசிப்போர் வாக்களிப்பதற்காக  மாத்திரம் பயண செலவை அதிக செலவிட வேண்டி இருப்பதால் இக்கட்டான சூழ் நிலைக்குத் தள்ளப்படுவதாகக்  குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக சிலர் தேர்தல் நாளில் அல்லது அதற்கு முன்னதாக தனியார் நிறுவனங்களில் விடுமுறைக்கு  விண்ணப்பிக்கிறார்கள் இதனால்  தனியார் நிறுவனங்களின் செயல்திறனில் இழப்பு ஏற்படும் என்று கபே அமைப்பு  குறிப்பிட்டுள்ளது. 

குறித்த காரணங்களைக் கருத்திற்கொண்டு விசேடமாக தனியார் வைத்தியசாலை, பாதுகாப்பு சேவைகள், ஹோட்டல்கள், ஆடை தொழிற்சாலைகள் ஆகிய தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தபால் மூலம் வாக்களிப்பதற்கான முறையை நடை முறைப்படுத்துமாறு குறித்த கடித்ததில் கபே அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. 

கபே அமைப்பின் நிர்வாக இயக்குனர் அஹமட் மனாஸ் மகீனின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.