New year offer 2017

இலங்கை செய்திகள்

நிமல் சிறிபால - சாதாரண குற்றத்திற்காக நீண்டகாலம் சிறையிலிருப்போருக்கு பிணை வழங்க சட்டத்தில் திருத்தம்

02/14/2020

சிறைச்சாலைகளின் இடநெருக்கடியை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அத்துடன்  சாதாரண குற்றங்களுக்காக நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிணைவழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுவருகின்றோம் என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலை கட்டட புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சீமெந்து மற்றும் தரை ஓடுகளை அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தைதிகள் அவர்களின் தவறுகள் மாத்திரம் அல்லாமல் சமூகத்தில் இருக்கும் தவறுகள் காரணமாகவும் சிறைக்கைதிகளாக இருக்கின்றனர். அவர்கள் குற்றம் செய்வதற்கு சமூகமும் காரணமாகும். சிறைச்சாலைகளில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பு பட்டவர்களாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் ஹெராரோயின் தொடர்பான வழக்குகள் 64வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரம் இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

அத்துடன் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவது அரசாங்கத்தின் கடமை. சிறைச்சாலைகள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இடம் என்ற எண்ணத்தை மாற்றியமைத்து, தவறு செய்தவர்களை புனர்வாழ்வளிக்கும் இடமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 

அத்துடன் கைதிகளுக்கு இங்கு தொழில் பயிற்சிகளை வழங்கிவருகின்றோம் என அவர் தெரிவித்தார்.