New year offer 2017

இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் 22 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்காணிப்பில்

03/22/2020

நாடளாவிய ரீதியிலுள்ள 22 தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் 3063 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, சுமார் 10 ஆயிரம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 245 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தற்போதைய நிலைவரம் மற்றும் சிகிச்சை, தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாவது,

சுகதார அமைச்சர் தெரிவித்துள்ள வகையில் இலங்கையில் மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதற்கமைவாக மொத்தம் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் (கொரோனா தொடர்பான இறுதி அறிவிப்புக்கு முன்னர்). 

இவர்களுள் 48 பேர் வெளிநாட்டிலிருந்து இந்நாட்டுக்கு வந்தவர்கள். 17 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட நபர்களாவர். எஞ்சியோருக்கு தொற்று ஏற்பட்ட முறை குறித்த விடயங்கள் பற்றி ஆராயப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலாக சுமார் 10, 000 பேர் சுகாதாரப்பிரிவு, இராணுவம், புலனாய்வுப்பிரிவு, பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கர்களினால் அடையாளம் காணப்பட்டு சுயமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்ததன் படி இன்றைய தினம் தொடக்கம் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மேலதிகமாக கொழும்பு கிழக்கு – முல்லேரியா வைத்தியசாலை, இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விசேட வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைவாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்காக தயார் படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் கர்ப்பிணி தாய்மாருக்காகவும் டி சொய்சா மற்றும் காசல் வீதி மகளிர் வைத்தியசாலை விசேட வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் ஹோமாகம ஆதார வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படுபவர்களின் சிகிச்சைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. வொயிஸ் ஒஃப் அமெரிக்கா கட்டடத் தொகுதி இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நவீன மயப்படுத்தப்பட்டு வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று வெரஹெரவில் அமைந்துள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தில் 30 கட்டில்களுடன் சிகிச்சை பிரிவொன்று ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் 22 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3063 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களில் 31 பேர் வெளிநாட்டு பிரஜைகளாவர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 77 என்பதுடன், இவர்களில் 69 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும் நால்வர் அநுராதபுரம் வைத்தியசாலையிலும் மூவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இம் மாதம் 20 ஆம் திகதி இரவு 10.30 க்கு யு.எல்.196 இலக்க விமானத்தில் இந்தியாவில் புதுடில்லி நகரிலிருந்து வந்த 172 பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இரணைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கும் 41 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் அத்தியாவசிய விடயங்கள் தவிர வீடுகளிலிருந்து வெளியேறாமல் வீட்டுக்குள் தங்கியிருந்து இந்த தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.