New year offer 2017

இலங்கை செய்திகள்

ஊரடங்கின் போதும் தேவைக்கேற்க மருந்தகங்களை திறக்க அனுமதி: சுகாதார அமைச்சு

03/24/2020

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போது தேவைக்கேற்க மருந்தகங்களை (ஃபாமசி உள்ளிட்டவை) திறப்பதற்கு அனுமதியளிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் இன்று செவ்வாய்கிழமை இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ கிளினிக்குகள் மற்றும் பாமசிகளில் மருந்துகளைப் பெற்றுக் கொள்பவர்கள் சௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து சுகாதார அமைச்சினால் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அனைத்து மருந்தகங்களையும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் தேவைக்கேற்றவாறு திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதியளிக்கத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஊரடங்கின் போது மருந்து கொள்வனவு செய்பவர்களிடம் அதற்கான சீட்டினை பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மருந்துகளை கொண்;டு செல்லும் வாகனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.