New year offer 2017

இலங்கை செய்திகள்

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

05/19/2020

அடிப்படைவாத அச்சுறுத்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் அவ்வாறு அடிப்படைவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வுத்துறையிலிருந்து எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்ற போதிலும் தேசிய பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளும் கைவிடப்படவில்லை.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் அனைத்து புலனாய்வுத்துறையினரும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச மற்றும் மேற்குலக ரீதியில் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுத் தரவுகளை பெற்றுக் கொள்வதற்காக புலனாய்வுத்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்டங்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினிரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான போதைப் பொருள் வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போதே அவர்கள் இவ்வாறான அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

எவ்வாறிருப்பினும் தீவிரவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இராணுவம் மற்றும் பொலிஸ் அனைத்து சந்தர்ப்பத்திலும் தயாராகவே உள்ளது.