New year offer 2017

இலங்கை செய்திகள்

சம்பந்தன், மாவைக்கு நிர்வாகச் செயலாளர் கடிதம் - சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள்

05/19/2020

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தியும் தமிழரசுக்கட்சியை விமர்சித்து பெருந்துரோகம் இழைத்துள்ள சுமந்திரன் மீது உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூ.சேவியர் குலநாயகம் எழுத்துமூலம் கோரியுள்ளார். 

சுமந்திரனின் செவ்வி தொடர்பானது என்று தலைப்பிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்  மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும்  அனுப்பியுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக இயங்கிய காலப்பகுதியில் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழுவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அவ்வாறு செயற்பட்டமைக்கான முக்கிய காரணம், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவர் தெரிவித்த விமர்சனங்களாகும். கட்சியின் தலைமைப்பதவி மாற்றத்திற்காகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமல் போனமைக்கு வேறுகாரணங்கள் இருக்கலாம்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் எமது கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும்ரூபவ் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்ரூபவ் பாராளுமன்ற தேர்தல் அபேட்சகருமான ம.ஆ.சுமந்தின் இம்மாதம் 08ஆம் திகதி அன்று சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். அதில் தமிழினம் சார்பாக இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்தினையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தியும் எமது கட்சி தமிழீழ விடுதலைப்புலிகள் விடயத்தில் பிழையான அனுகுமுறையை கொண்டிருந்தது என்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறியுள்ளார்.

ஆனந்தசங்கரி கொண்டிருந்த நிலைப்பாட்டினை விடவும் மோசமான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் தமிழ்த் தேசியகத்திற்கும்ரூபவ் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் பெருந்துரோகம் விளைவித்துள்ளார் என்றே மக்கள் கருதுகின்றார்கள்.

தனிப்பட்ட கருத்துக்களை யாரும் எப்படியும் கொண்டிருக்க முடியும். ஆனால் ஒரு அரசியல் கட்சியில் அதுவும் இனவிடுதலை, சுதந்திரத்தினை நோக்காக கொண்டு செயற்படும், இலங்கை தமிழரசுக்கட்சியில் இணைந்து நின்றுகொண்டு கூட்டுப்பொறுப்பற்ற முறையில் கருத்துக்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

 

அடிப்படையில் மாறுபாடான கொள்கைகள் கருத்துக்கள் இருக்குமானால் கட்சிக்கு வெளியே சென்று கூறவேண்டும். பாகிஸ்தான் நாடு பிரித்துக்கொடுக்கும் விடயத்தில் மகாத்மா காந்தியுடனும் இந்தியகாங்கிரஸ் கட்சியுடனும் முரண்பட்ட மூதறியர் இராஜி கட்சியை விட்டு வெளியேறி மும்பையில் பகிரங்க கூட்டம் கூடி அதில் விளக்கமறித்தார். அது முறையானதும் அரசியல் நாகரீகமும் ஆகும். பாராளுமன்ற உறுப்பினராக தொடரும் ஆவவாவோடு எப்படியும் சொல்லலாம், செயற்படலாமென கருத்தக்கூடாது. 

இலங்கை அரசியலில் தமிழனத்தின் சார்பாக முக்கியவகிபாகம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, சுமந்திரனின் போக்கிற்கு விட்டுக்கொண்டு போனால் கட்சி மட்டுமல்ல தமிழினமே தேய்ந்து போகும்.

ஆனந்தசங்கரிக்கு எதிரான தீர்மானித்தை நான் பிரேரித்து அதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் ஆனந்தசங்கரியே தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவராக தொடர்கின்றார். இதனாலேயே இலங்கை தமிழரசுக்கட்சி மீளெழுச்சி பெற்று இன்று உயர்ந்து நிற்கின்றது. ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப்புலிகள் மீது கொண்டிருந்த கருத்தக்களை விடவும் சுமந்திரன் மோசமான கருத்துக்களையே தற்போது கூறியுள்ளார்.

 தமிழினத்தின் சார்பாக இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்தினையும் ஆயுதப்போராட்ட காலப்பகுதியில் எமது கட்சி நடந்து கொண்ட அனுகுமுறைபற்றியும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

இவற்றைக் கருத்திற்கொண்டு சுமந்திரன் மீது ஏற்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகின்றேன். வரும்பொதுத்தேர்தலில் ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்கவும் சுமந்திரன் மீது ஒழக்காற்று நடவடிக்கை அவசியமாகின்றது. முழுத்தமிழ் உலகமும் சுமந்திரனின் செவ்வி தொடர்பில் அதிக விரக்தி அடைந்துள்ளது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.