New year offer 2017

இலங்கை செய்திகள்

ஜனகன் - அரசியல்வாதிகள் மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்

06/25/2020

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஹரின் பெர்னாண்டோ  மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை பற்றி தெரிவித்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் , கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு கண்டணம் தெரிவித்துள்ளதுடன் ஆண்டகையை சந்தித்து தனது கவலையையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, மதத்தலைவர்களை அரசியல்வாதிகள் விமர்சிப்பதை இனியும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இந்நாட்டை பொருத்தமட்டில் அரசியல்வாதிகள் மதத்தலைவர்கள் பற்றி பேசுவதும் , மதத்தலைவர்கள் அரசியல் பேசுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஹரின் பெர்ணோன்டா பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை பற்றி தெரிவித்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமேதாச உடனே கவனம் செலுத்தி அது தொடர்பில் அவருக்கு கண்டணம் தெரிவித்துள்ளதுடன் , பேராயரை சந்தித்து மன்னிப்பும் கோரியிருந்தார்.

அரசியல் வாதிகள் முன்வைக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் பொதுக்கருத்து கிடையாது.  இவ்வாறான நிலையில் ஹரின் பெர்ணான்டோவின் கருத்தும் எமது கட்சியின் கருத்து கிடையாது. இலங்கையை பொருத்தமட்டில் மதத் தலைவர்கள் நேரடியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படுவதும் , அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஆதரவாக மதத்தலைவர்கள் செயற்பட வேண்டும் என்று எண்ணுவதும் வழக்கமாகியுள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ள  வேண்டும். மதத்தலைவர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படுவது என்பது பிழையான முன்னுதாரணமாகும்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் கர்தினால் ஆண்டகை செயற்பட்ட விதத்தினால் ஏற்படவிருந்த பல இன முரண்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்பதை நாம் மறுத்தல் கூடாது. இதேவேளை ஹரின் பெர்ணான்டோ ஒரு கிறிஸ்தவர் . அவரது மதத்தலைவரை பற்றியே அவர் விமர்சித்திருக்கின்றார். அதனால் வேறு மதத்தவர் ஒருவர் விமர்சித்தது போன்ற எண்ணத்திலும் இந்த விடயத்தை பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற விமர்சனங்களை தவிர்த்துக் கொள்வதே சிறந்தது என்றே நான் எண்ணுகின்றேன்.

ஆளும் தரப்பினருக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மக்களிடம் கூறுவதற்கு எந்த கருத்தும் இல்லை. அதனால் நாளுக்கு நாள் என்ன தகவல்கள் கிடைக்கின்றதோ அதனைக் கொண்டே அவர்களது பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனாலேயே ஹரின் பெர்ணான்டோவின் கருத்தையும் தற்போது அரசியலாக்கியுள்ளனர். இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் எமது வெற்றி உறுதியாக்கப்பட்டுள்ளது என்றே நாங்கள் எண்ணுகின்றோம்.