New year offer 2017

இலங்கை செய்திகள்

வேட்பாளர்கள் குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்பதி

06/25/2020

வேட்பாளர்கள் தங்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புக்களை மக்களுக்கு பகிரங்கப்படுத்தி நேர்மைத்தன்மையை வெளிப்படுத்தவேண்டும். ஆனால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் யாரும் இதுவரை அதனை செய்யவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

மார்ச் 12 அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட 7ஆயிரத்தி 452வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் 3ஆயிரத்தி 652பேர் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியும் 3ஆயிரத்தி 800பேர் சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தியும் போட்டியிடுகின்றனர். எனினும் வாக்காளர்களின் விருப்பத்துக்கமைய 196 உறுப்பினர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படவுள்ளனர். 

போட்டியிடும் வேட்பாளர்களில் குறுகிய எண்ணிக்கையிலானவர்களே பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர். அவர்களில் யாரை தெரிவுசெய்வதென்பதை மக்களே தீர்மானிக்கின்றனர். போட்டியிடும் வேட்டபாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் முதற்படியாவது, அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதாகும். அதனால் அரச வளங்களை அல்லது மக்கள் உழைத்து அரசாங்கத்துக்கு வழங்கும் வரிப்பணத்தை தமது நலனுக்காக பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கவேண்டிய பொறுப்பு வேட்பாளர்களுக்கு இருக்கின்றது.

அத்துடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரத்தினை எமது மார்ச் 12 இயக்கத்துக்கு வழங்க முடியுமானால் அதற்கு சரியான மக்களின் பிரதிபலிப்பை பெற்றுத்தர நாமும் சகல முயற்சிகளையும் எடுப்போம். 

அவ்வாறு இல்லை என்றால் வேட்பாளர்கள் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அல்லது சமூக வலைத்தலங்கள் ஊடாகவும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தலாம்.

மேலும் வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பாெறுப்புக்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தாலும் சட்டத்தின் பிரகாரம் அதனை வெளிப்படுத்தும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை. அதனால் வேட்பாளர்கள் சுயமாக முன்வந்து இதனை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம் மக்களும் அவ்வாறானவர்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிப்பார்கள். கடந்த தேர்தலில் 11வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் யாரும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் கடந்த காலங்களில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு சென்றவர்களில் அதிகமானவர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தியில்லாமல் இருந்தது. அதனால் அரசியல் கட்சிகள் தங்களின் வேட்புமனுக்களில் தகுதியானவர்களை பெயரிடுமாறு தெரிவித்தோம். ஆனாலும் இம்முறை வேட்புமனுக்களிலும் முன்னர் பாராளுமன்றத்தில் இருந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அதனால் யாரை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என சிந்தித்து, சிறந்தவர்களை இனங்கண்டு அவர்களை தெரிவுசெய்யும் பொறுப்புப்பு மக்களுக்கு இருக்கின்றது. அதனை மக்கள் சரியான முறையில் செய்யவேண்டும் என்றார்.