New year offer 2017

இலங்கை செய்திகள்

40 பூரணமற்ற அறிக்கைகளை திருப்பியனுப்பிய சட்ட மா அதிபர் - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள்

06/26/2020

 

உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த சம்பவத்தை மையப்படுத்தியும் அது சார்ந்த ஏனைய சம்பவங்கள் குறித்தும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் பல்வேறு பொலிஸ் நிலையங்களால் சட்ட மா அதிபருக்கு, சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்ட 40 கோவைகள்  திருப்பி அனுப்பட்டுள்ளன.

 

சம்பூரணமற்ற விசாரணை கோவைகளே இவ்வாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவால் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு  திருப்பி அனுப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர்  சிரேஷ்ட அரச சட்ட்வாதி நிஷாரா ஜயரத்ன கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

' பல்வேறு பொலிஸ் நிலையங்கள் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை மையப்படுத்திய பல்வேறு விசாரணைகளின் கோவைகள்  வழக்கு தொடர்வதற்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டிருந்தன. 

இதில் 40 கோவைகளில் விசாரணைகள் பூர்த்தியாகி இருக்கவில்லை.  அந்த விசாரணைகளால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் மிகவும் பலவீனமாக அந்த விசாரணைக் கோவைகள் இருந்தன.  அதனால் அந்த கோவைகளை மீள திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.' என  சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷார அஜயரத்ன கேசரியிடம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை மையப்படுத்திய எந்த விசாரணையாக இருப்பினும் எதிர்காலத்திலும் பூரணப்படுத்தப்படாத கோவைகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டால் அவையும் திருப்பி அனுப்படும் என குறிப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நிஷாரா ஜயரத்ன,  40 கோவைகளையும் திருப்பி அனுப்பும் போது, அந்த கோவைகள் சார் விசாரணைகளை மிக விரைவில் பூர்த்தி செய்து அனுப்ப பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசணை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.