New year offer 2017

இலங்கை செய்திகள்

ரவிகரன் - தமிழர்களின் வாக்கை சிதறடிக்க பலர் வேட்பாளர்களாக களத்தில்

06/26/2020

எமது தமிழ் மக்களுடைய வாக்குகளைச் சிதறடிப்பதற்காக சுயேற்சைக் குழுக்களாகவோ, அல்லது மாற்று அணிகளாகவோ பலர் தற்போது கங்கணங் கட்டிக்கொண்டு பாராளுமன்ற வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இவ்வாறு களமிறங்கியுள்ளவர்களுக்குத் துணைபோகாமல், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே அனைத்து மக்களும் வாக்களிக்கவேண்டும். அவ்வாறு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை எவராலும் உடைக்க முடியாதென்ற நிலையினை காட்டவேண்டும். இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் நேற்று  இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மேலும் குமுழமுனைக் கிராமத்தில், படலைக்கல்லுப் பகுதியில் 23 தமிழ் பயனாளிகளுடைய 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாதென வனவளத் திணைக்களத்தினர் தடுத்துவைத்துள்ளனர்.

அத்தோடு தண்ணி முறிப்புக்குளத்தினை அண்டிய பகுதிகளில் சிங்களக்குடியேற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான முனைப்புக்களும் அடிக்கடி இடம்பெற்றுவருகின்றன.

இவற்றினைவிட குமுழமுனைப் பகுதியிலுள்ள நித்தகைக்குளம் கடந்த 2018 ஆம் ஆண்டு உடைப்பெடுத்த நிலையில் அவையும் உரியவர்களால் இதுவரை சீர்செய்யப்படவில்லை. இதனால் அக்குளத்தின் கீழ் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மணலாற்றுப் பகுதியில் தமிழர்களுடைய பூர்வீக அமையன் குளத்தினையும், அதன் கீழான வயல் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆமையன்குளம் கிரிப்பன் வெவ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, மைத்திரிபால சிறிசேன அரசதலைவராக இருந்தபோது அந்தக்குளம் சுமார் 113 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு சிங்கள மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக இங்குள்ள தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்திற்கான வழிகளை முடக்குவதான செயற்பாடுகளில் ஒரு புறம் அரச திணைக்களங்களும், அரசும் ஈடுபட்டு வருகின்றமையினையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.