New year offer 2017

இலங்கை செய்திகள்

ஜே.வி.பி கேள்வி - ஐ.தே.க. அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது இப்போது தான் தெரியுமா ?

06/27/2020

மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தம் குறித்து தற்போது முன்வைக்கப்படும் கருத்துக்கள் அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சியையே வெளிப்படுத்துகிறது. ஐ.தே.க. அரசாங்கம் இரு கட்டங்களாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது இப்போது தான் தெரியுமா? இந்த தகவல்களையும் ஜே.வி.பி. தான் பெற்றுக் கொடுக்க வேண்டுமா? அவ்வாறெனில் ஆட்சிக்கு வர முன்னர் ராஜபக்சக்கள் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார்களா என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாநாயக்க கேள்வியெழுப்பினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து தற்போது முன்வைக்கப்படும் கருத்துக்கள் அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சியையே வெளிப்படுத்துகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் எம்.சி.சி. குறித்து பாராளுமன்றத்தில் பேசப்பட்ட போதே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மாத்திரமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ எவ்வித எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை. இவ்விரு கட்சிகளிலும் சுமால் 50 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் அன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். குறிப்பாக ராஜபக்சக்கள் இது தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பிரசார மேடைகளில் எம்.சி;.சி. ஒப்பந்தமே பிரதான பேசு பொருளாகக் காணப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அப்போது பழையாதாகி விட்டது. அதனை விட எம்.சி.சி ஒப்பந்தமே கோத்தாபயவிற்கு அதிகளவான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தது. இது குறித்து தேர்தல் பிரசார மேடைகளில் ராஜபக்சக்கள் பேசியிருக்காவிட்டால் அவர்களால் வென்றிருக்க முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையே இதற்கு அனுமதி வழங்கியது. எனவே தற்போது அதனை நீக்குவது பாரிய சவாலானதொரு விடயமல்ல. இலகுவாக நீக்கிக் கொள்ள முடியும். இருந்த போதிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டு இதனை காலம் தாழ்த்துவதற்காக எம்.சி.சி. பற்றி ஆராயும் மீளாய்வுக்குழுவை நியமித்தார். 6 மாதங்களின் பின்னர் அந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இரு கட்டங்களாக இதில் கையெழுத்திட்டு அமெரிக்காவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளதால் தற்போது ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது என்று அரச தரப்பு மறைமுகமாகக் கூறுகிறது. இவ்வாறான விடயங்கள் அரசாங்கத்தின் போலியான தேசப்பற்றினை வெளிப்படுத்துகிறது.

இந்த ஒப்பந்தம் இருகட்டங்களான கையெழுத்திடப்பட்டுள்ளது என்பது இப்போது தான் அரசாங்கத்திற்கு தெரியுமா? அவ்வாறாயின் ஆட்சிக்கு வர முன்னர் பாராளுமன்றத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தீர்களா? இது போன்ற அனைத்து தகவல்களையும் ஜே.வி.பி. தான் பெற்றுக் கொடுக்க வேண்டுமா? இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எம்.சி.சி. உடன்படிக்கையில் 70 வீதம் நன்மை இருப்பதாகக் கூறியது. உண்மையில் நாட்டுக்கு 70 வீதம் நன்மை கிடைக்கும் என்றால் அதில் கையெழுத்திடுமாறு நாமே கோருவோம். ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். காரணம் அமெரிக்க போன்ற நாடு இவ்வாறான ஒப்பந்தங்களில் இலங்கைக்கு 10 வீத நன்மையைக் கூட வழங்காது என்பதே உண்மையாகும்.

இது முற்று முழுதாக தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று கூற வாக்குகளைப் பெற்ற பின்னர் அப்பாவி பொது மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கோரிக்கை விடு;க்கின்றோம் என்றார்.