New year offer 2017

இலங்கை செய்திகள்

நட்டஈட்டுக் கொடுப்பனவின் 2 ஆவது கட்டத்தினை ஆரம்பிக்கிறது மத்திய வங்கி

06/27/2020

த பினான்ஸ் கம்பனி பி.எல்.சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்தினை எதிர்வரும் ஜுலை 2 ஆம் திகதியிலிருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதன்படி ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் 600,000 ரூபா என்ற அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும் என்றும் மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் த பினான்ஸ் கம்பனி பி.எல்.சியின் நிதி வியாபார உரிமம் இரத்துச்செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அதன் வைப்பாளர்களுக்கான அல்லது வைப்பாளர்களின் சட்டரீதியான நன்மை பெறுநர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் மூலம் கடந்த மாதம் 7 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய கொடுப்பனவுப் பொறிமுறையின் முதலாவது கட்டத்தின் கீழ் ஒரு கணக்கினை மட்டும் பேணிய தனிப்பட்ட வைப்பாளர்களுக்கு, அதாவது மொத்தமாக ஏறத்தாழ 105,000 வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பொறிமுறையின் இரண்டாவது கட்டத்தின் கீழ் ஏறத்தாழ மற்றுமொரு 38,000 வைப்பாளர்களின் நட்டஈட்டுக் கொடுப்பனவினைப் பெறுவதற்கு உரித்துடையவராகவிருப்பர்.

இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் த பினான்ஸ் கம்பனி பி.எல்.சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்தினை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய அத்தகைய கொடுப்பனவுகள் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் வங்கியின் 63 கிளைகளில் இடம்பெறும். இந்நட்டஈட்டுப் பொறிமுறையின் நியதிகளுக்கிணங்க, ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் 600,000 ரூபா என்ற அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும்.

நட்டஈட்டு நடைமுறைகள் வினைத்திறனுடனும் காத்திரமான விதத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியிருக்கும் அதேவேளை, இதனை விரைவாக நிறைவேற்றும் நோக்கில் மத்திய வங்கி தனது முகவராக மக்கள் வங்கியை நியமித்திருக்கிறது.

த பினான்ஸ் கம்பனியின் வைப்பாளர்கள், அவர்களது மூல வைப்புச்சான்றிதழ்கள், அடையாளப்படுத்தும் விபரங்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்த நட்டஈட்டுக் கொடுப்பனவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது. 

இதுகுறித்த மேலதிக விபரங்களை 011-2481594, 011-2481320, 011-2481612, 011-2481703 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் வங்கியைத் தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.