இலங்கை செய்திகள்
பிமல் ரத்நாயக்க - பொதுஜன பெரமுனவையே இலக்கு வைக்கும் இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி
02/19/2021இந்தியாவில் இன,மத அடிப்படையிலான கடும்போக்குவாத அரசியலில் ஈடுபடும் பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் கிளையை நிறுவுவதற்குத் திட்டமிடுமாயின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறிய கட்சிகளை இலக்குவைக்காது.
மாறாக அவர்களின் கடும்போக்குவாதக் கொள்கைகளுடன் நன்கு பொருந்திப்போகின்ற பொதுஜன பெரமுனவையே இலக்குவைக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் கிளையொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படுமாயின், அது இருநாடுகள் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதுடன் நாம் அதனை எதிர்க்கின்றோம்.
எனினும் இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு நாம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் விரோதிகளாகக் கருதவோ அல்லது அவர்களை எதிர்க்கவோ தேவையில்லை. ஏனெனில் அங்கு சாதாரண மக்களின் மனநிலை எவ்வாறானதாக இருக்கிறது என்பதை விவசாயிகள் போராட்டத்தின் ஊடாகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
எனினும் இந்தியா என்பது மிகவும் விரிவான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதுடன் அங்குள்ள செல்வந்தர்களுக்கு தமது பொருளாதாரப்பலத்தை விஸ்தரித்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. அவர்களே இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும். இலங்கையில் உள்ள பல கட்சிகள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கலந்தாலோசித்துத்தான் தீர்மானங்களை மேற்கொள்கின்றன.
எம்மைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் கிளையை நிறுவுவதற்குத் திட்டமிடுமாயின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறிய கட்சிகளை இலக்குவைக்காது.
அதனால் அவர்களுக்கு எவ்வித பயனுமில்லை. மாறாக தற்போது ஆட்சியிலுள்ள பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அதுமாத்திரமன்றி இந்தியாவில் இன மற்றும் மதவாதத்தை மையமாகக் கொண்டு கடும்போக்குவாத அடிப்படையில் செயற்படும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையும் எமது நாட்டில் இன, மதவாத அரசியலில் ஈடுபடும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளும் நன்கு ஒத்துப்போகக்கூடிய வகையில் உள்ளன. எனவே அவர்கள் தமது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கு பொதுஜன பெரமுனவையே இலக்குவைக்கக்கூடும் என்று நாம் கருதுகின்றோம் என்றார்.