இலங்கை செய்திகள்
கடுமையாக சாடும் ஜே.வி.பி. : இந்தியா– சீனா வழங்கும் கொவிட் தடுப்பூசிகளுக்காக துறைமுகங்களை வழங்கும் அரசு
02/19/2021இந்தியாவும் சீனாவும் வழங்கும் கொவிட் தடுப்பூசிகளுக்கு அடிபணிந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் , கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தையும் அந்த நாடுகளுக்கு அரசாங்கம் வழங்குகிறது.
கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பொருளாதார பலம் இல்லையா என்று மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.
குருணாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில் ,
இந்தியாவும் சீனாவும் வழங்கும் கொவிட் தடுப்பூசிகளுக்கு அடிபணிந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் , கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தையும் அந்த நாடுகளுக்கு அரசாங்கம் வழங்குகிறது.
கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பொருளாதார பலம் இல்லையா? அநாவசிய செலவுகளை தவிர்த்து அந்த பணத்தில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு ஒதுக்க முடியுமல்லவா? இது தற்போது நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினையாகும்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களா கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் பிரதான குழுவாகவுள்ளனர் ? நூற்றுக்கணக்கான சுகாதார அதிகாரிகளும், பாதுகாப்புபடையினரும் , பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் , நகர மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பொது மக்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணும் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் புறந்தள்ளி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்குவது நியாயமற்றது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் நாம் தடுப்பூசி ஏற்றிக் கொள்கின்றோம். அவ்வாறின்றி 225 பேருக்கு மாத்திரம் தடுப்பூசி ஏற்ற அழைத்தால் அதற்கு நாம் தயாரில்லை. இதுவா நாட்டின் தேசிய கொள்கை? மக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு வழங்குவதே சிறந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.