New year offer 2017

இலங்கை செய்திகள்

ரவூப் ஹக்கீம் - தனது குடியுரிமையை நீக்க அரசாங்கம் முயற்சி

02/19/2021

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை பயன்படுத்தி அரசாங்கம் தனது குடியுரிமையை நீக்க முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. விசேடமாக முன்னணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை இரத்து செய்யும் நோக்கத்தில் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்போது என்னையும் , என்னைப்போன்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியிலுள்ள அரசியல் தலைவர்களினதும் குடியுரிமையை இரத்து செய்ய முயற்சித்து வருகின்றது.  அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அதற்காக பயன்படுத்திக் கொண்டு அதுத் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அரசியல் தலைவர்களை மௌனிக்கச் செய்வதற்கும் , அவர்களது எதிர்ப்பை சமாளிப்பதற்காகவும் நீதியற்ற முறையில் செயற்பட்டு இவர்களே அவர்களது  முகங்களில் சேற்றை பூசிக் கொள்வார்களாயின் , இதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடுவோம். இத்தகைய செயற்பாடுகள் ஊடாக நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு மட்டுமன்றி சட்டமா அதிபரின் திணைக்களத்தின் சுயாதீன தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் இத்தகைய செயற்பாடுகளுக்கு அந்த நிறுவனங்கள் இடமளிக்கும் என்று நாம் எண்ணவில்லை. நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக நாம் எதிர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

கேள்வி: அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நீங்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்தாலும் , அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக உங்களது கட்சியினரும் ஆதரித்திருந்தனர் அல்லவா?

பதில் : ஆம், அதுத் தொடர்பில் எமது கட்சியினர் தற்போது புரிந்துக் கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கு தாம் ஆதரவினை வழங்கிய , போதிலும் ஜனாஸா விவகாரம் தொடர்பில் தங்களது வேண்டுகோளை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்று கவலையடைந்துள்ளனர். இதற்காக பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்புக் கோரவும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

கேள்வி : பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதால் , நடந்து முடிந்த ஒன்றையும் மாற்றியமைக்க முடியாது அல்லவா?

பதில்: உண்மைதான். இதற்கான பயனை அவர்கள் எதிர்வரும் தேர்தலின் போது அனுபவிப்பார்கள் என்று எண்ணுகின்றேன். எமது மக்கள் மத்தியில் தற்போது அவர்கள் தொடர்பான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேள்வி : பாகிஸ்தான் பிரதமரின் உரையை பாராளுமன்றத்தில் நடத்தமுடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் : தங்களது பிரதமரின் கருத்தையே ஏற்றுக் கொள்ள முடியாத ஆளும் தரப்பினர் , வெளிநாட்டு பிரதமர் ஒருவருக்கு இவ்வாறு தெரிவிப்பது ஆச்சிரியத்துக்குறிய விடயமல்ல. இத்தகைய செயற்பாடுகள் காரணமாக சர்வதேச மத்தியில் எமக்கு ஏற்படும் அவப்பெரை தடுக்க முடியாது. இந்நிலையில் பாராளுமன்றுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதனாலேயே பாகிஸ்தான் பிரதமருக்கு மறுப்பு தெரிவிப்பதாக காரணங்கள் தெரிவித்து வருகின்றனர். இது உண்மையில் கண்டிக்கத்தக்க கருத்தாகும்.